இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் தொல்லியல் தளங்களை பார்ப்பதிலும் அது தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வதிலும் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் கீழடி அருங்காட்சியக அமைப்பிற்குப் பிறகு தமிழகம் முழுவதும் கற்றோர்களிடமும் பொது மக்களிடமும் தொல்லியல் சார்ந்த விருப்பங்கள் கூடுதலாகி உள்ளன.

Advertisment

கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலே தொல்லியல் சார்ந்த கல்வெட்டுகள், குடைவரைகள், பாறை ஓவியங்கள் மற்றும் கோவில் கட்டுமானங்கள் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த அரசர்களின் ஆட்சி அமைப்புகள் அவர்களின் கொடைகள் போன்றவற்றை தங்களது பாடப்பகுதியாகவும் படித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படும் வகையிலும் தமிழக வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலும் தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிவகங்கை தொல்நடைக்குழு சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமல்லாது பிறமாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்களையும் பார்வையிட தொல்நடை களப்பயணத்தை நடத்துகின்றனர்.  

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்தரைய மன்னர்களின் கலை படைப்புகளான விஜயாலய சோழீஸ்வரமான பழமையான கட்டுமானக் கோவில், பழியிலீசுவரம் என அழைக்கப்படும் சிவன் குடைவரை, சமணக்குடுகு என்றும் பதினெண் பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் விஷ்ணுகுடைவரைக் கோவில், சோழர், பாண்டியர் கல்வெட்டுகள், கடம்பர்மலையில் சோழர், பாண்டியர் கால கட்டுமானக் கோவில்கள், சோழர், பாண்டியர் கல்வெட்டுகள், மலையடிப்பட்டி சிவன், விஷ்ணு முத்தரையர் குடைவரைகள், மேல்பகுதியில் உள்ள சமணப்படுக்கைகள் ஆகியவற்றை கண்ணுற்றதோடு, குன்றாண்டார்கோயில் குன்றத்து நாயனார் குடைவரைக்கோவில் அருமையான வேலைப்பாடுடைய தேரை இழுத்துச் செல்லும் குதிரை, உருளும் சக்கரங்களோடு உள்ள பழமையான கலையரங்கம் ஆகியவற்றை கண்டுகளித்து வியப்புற்றனர்.நிறைவாக சங்ககாலக் கோட்டையாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டைக்குச் சென்று வானளாவி நிற்கும் மண்ணும் கட்டுமானமுமான மதில் சுவரைக்கண்டு வியந்தனர்.

cho2

களப்பயணத்தில் அவ்விடங்களின் சிறப்பை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா. காளிராசா விளக்கிக் கூறினார். சிவகங்கையிலிருந்து தொடங்கிய இப்பயணத்தை சிவகங்கை தொல்நடைக் குழுத் தலைவர் நா. சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொல்நடைப் பயணம் ஒன்பதிற்கான பயணக் கையேட்டை அவர் வெளியிட சிவகங்கை தொல்நடைக் குழுவின் உறுப்பினரும் காவல் ஆய்வாளருமான சு. காளீஸ்வரன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன் செய்திருந்தார். இப்பயணத்தில் சிவகங்கை தொல்நடைக்குழு இணைச்செயலர் க. முத்துக்குமரன், வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் உட்பட நாற்பதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment