ஒடிசாவின் ரூர்கேலாவில் தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (RCS) கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 9 இருக்கைகள் கொண்டது. இந்த விமானம் வழக்கம் போல் ரூர்கேலாவில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பறந்த பிறகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

Advertisment

முன்னதாக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றைக் கண்டறிந்த உடனேயே, விமானி புல்வெளிப் பகுதியில், விமானத்தின் அடிப்பாகம் தரையில் மோதுமாறு செலுத்தித் தரையிறக்க முயன்றார். இதன் மூலம் விமானி நல்வாய்ப்பாக அனைத்துப் பயணிகளையும் காப்பாற்றினார். அதே சமயம் விமானத்தில் இருந்த பலர் காயமடைந்துள்ளனர். விமானியும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 

Advertisment

இந்நிலையில் இந்த குறித்து பேசிய ஒடிசா போக்குவரத்துத் துறை அமைச்சர் விபூதி பூஷன் ஜெனா, “ஓடு பாதையில் இருந்து விமான கிளம்பிய 10 கி.மீ. தொலைவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக, அங்குள்ள புல் வெளிப்பகுதியில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார். 4 பயணிகள் உட்பட விமானத்தில் இருந்த ஆறு பேரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விபத்தில் விமானி காயமடைந்துள்ளார். விமானம் சற்றே கீழ்நோக்கிச் சாய்ந்தது. விமானத்திற்குச் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் இறக்கைகள் ஏதும் சேதமடையவில்லை. இந்த சம்பவம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார். ஒடிசாவில்  சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.