மதுரையில் இருந்து பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் ஆக்சலுடன் சேர்ந்து கழண்டு ஓடியதால் விபத்து ஏற்பட்ட நிலையில் பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பினர். இருப்பினும் இந்த விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது  சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புலி நகர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் பின்பக்க டயர்கள் ஆக்சலுடன் வெடித்து பேருந்தில் இருந்து முற்றிலுமாக கழண்டு  பள்ளத்தை நோக்கி ஓடியது. இதனால் பேருந்து மேற்கொண்டு நகர முடியாமல் நடுவழியில் சறுக்கிக் கொண்டு நின்றது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நடு ரோட்டிலேயே குடைசாய்ந்த பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

Advertisment

அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசு பேருந்தில் ஆண்களுக்கும் இலவசம் என அதிமுக தேர்தல் அறிக்கையின் முதல்கட்ட வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசியிருந்த சீமான், ''ஆண்களுக்கு  இலவச பேருந்து நாங்கள் கேட்டோமா? சொல்லுங்க. ஏற்கனவே ஒரு லட்சம் கோடி இழப்பில் போக்குவரத்துதுறை போகிறது. இலவசமாக கொடுக்கிற காசை எங்க இருந்து எடுப்பீங்க? இது நல்ல திட்டமா நஷ்டமா?

ஒரு தரமான பேருந்து இருக்கிறதா? இப்போது இருப்பதெல்லாம் தரமான பேருந்தா? நீங்களும் உங்கள் குடும்பமும் அதில் போவீர்களா? கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பாதி பக்கம் பெயர்ந்து, முன்னாடி இல்லாமல், பின்னாடி இல்லாமல் போயிட்டு இருக்கும் போதே பேருந்து பெயர்ந்து ஓடுவதை பார்த்துக்கொண்டுதானே இருக்குறீர்கள். பேருந்தா காயலாங்கடையில் இருக்கும் பழைய இரும்பா அது. இலவச பேருந்து கொடுங்க என யார் கேட்டது.  

Advertisment

இலவச பேருந்தில் போவோருக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என எல்லோரும் பார்த்தோமே. 'ஓசிலதான வர' என பெண்களை பேசியதெல்லாம் கேட்டதில்லையா?  இதெல்லாம் ஒரு நலத்திட்டம் என்று சொல்ல வரீங்களா?'' என ஆவேசமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.