'அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் அதற்கு 10 நாட்கள் கெடு' என்ற கருத்தை கடந்த 5 ஆம் தேதி செய்தியாளர்கள் மத்தியில் மனந்திறந்து பேசியிருந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன். இது அதிமுக அரசியலில் புதிய புயலை வீசி இருந்தது. தொடர்ந்து டெல்லியில் அமித்ஷாவுடனும் செங்கோட்டையன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையன் கொடுத்த 10 நாள் கெடு இன்றுடன் முடிந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''என்னைப் பொறுத்தவரையில் எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதாவின் கனவை மீண்டும் நூறாண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அன்றைக்கு நான் மனம் திறந்து பேசினேன். இந்த கருத்திற்கு எம்ஜிஆரின் உண்மை விசுவாசிகள், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் மத்தியில் அதற்கான பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனுடைய நோக்கம் இயக்கம் ஒன்றுபெற வேண்டும். எம்ஜிஆருடைய, ஜெயலலிதாவுடைய ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த கருத்துக்களை அன்றைக்கு ஐந்தாம் தேதி பிரதிபலித்தேன். இதைப் பொறுத்தவரையில் தொண்டர்கள் பொதுமக்களுடைய கருத்துக்களை மனதிலே கொண்டு புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். மறப்போம் மன்னிப்போம் என்று அண்ணா கூறியதை நினைவு கூர்கிறேன். நம் இயக்கம் வலிமை பெறுவதற்கு, நம் இயக்கம் 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்'' என்றார்.