தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2025) தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள கோபால் நகரில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக தண்டையார்பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த திட்டத்தில் பயணடைந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20.42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 127,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16.73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னணு எடைத்தராசு, இ - பி.ஓ.எஸ் (ePoS) இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.