Advertisment

“அதெல்லாம் பழைய செய்தி” - திடீரென ரூட்டை மாற்றிய ஓ.பி.எஸ்.!

ops-pm-1

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணி தொடர்பாகத் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (29.01.2026) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரிந்து கிடக்கக்கூடிய அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினார். 

Advertisment

அந்த நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டம் தான் எங்கள் சட்டப் போராட்டம் ஆகும். அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஒன்றிணைய நான் ரெடி. அதற்கு டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? என்று கேட்டுச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், 

Advertisment

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் இது குறித்து பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். இது போன்று 3 முதல் 4 வருடங்களாகக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஏக மனதாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். ஓ. பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.

ops-eps

ஓ. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டது என்பது பொதுச்செயலாளர் எடுத்த முடிவு அல்ல. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுக்குழு  உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவு” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வம், “அதெல்லாம் பழைய செய்தி” எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

admk edappadi k palaniswami O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe