'That is Modi's wish' - OPS sensational interview Photograph: (ADMK)
வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. அதனையொட்டி அதிமுகவில் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவு குறித்து வலியுறுத்தி வந்த நிலையில் அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனும் அதிமுக ஒன்றிணைவு குறித்த கருத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பேசுகையில், ''அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். அப்படி வரும்போது தான் எம்.ஜிஆர், ஜெயலலிதாவுடைய கனவை மீண்டும் தமிழகத்திலே உருவாக்குவதற்கு அது ஏதுவாக இருக்கும் என்று கருத்துக்களை நான் வெளியிட்டேன். அதற்குப் பிறகு கழக பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டேன்.
ஜெயலலிதா நம்மைச் சுற்றி இருக்கின்ற யாரையும் விலக்கவில்லை. அரவணித்து சென்ற வரலாறுகள் இருக்கிறது. இன்றைக்கு அந்த நிலை இல்லை. யார் நம்மிடத்தில் பேசினாலும் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது இயக்கத்தை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல தன்னை சுற்றி இருக்கிறவர்களையும் பலவீனப்படுத்துகிறது. எடப்பாடி முதலமைச்சர் ஆனதற்கு பிறகுதான் எனக்கு அமைச்சராகவே இடம் தந்தோம் என்று சொன்னார்கள். எங்களைப் போன்றவர் முன்மொழியவில்லை சொன்னால் முதலமைச்சரே ஆகி இருக்க முடியாது எடப்பாடி. ஜெயலலிதா மூலமாக மூன்று முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடியை பொறுத்தவரை கொல்லைப்புற வழியாக முதலமைச்சரானவர் என்பது நாடறிந்த ஒன்று. இன்று நான்தான் அவருக்கு அமைச்சர் இடம் தந்தேன் என்று சொல்வது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில், ''பிரதமர் மோடியும், அமித்ஷாவும், பாஜகவின் மேல்மட்ட தலைவர்களும் அதிமுக இணைய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் தனிப்பட்ட மனிதருடைய விருப்பு வெறுப்பு இயக்கத்திற்குள் சென்றது அதிமுக ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கிறது. என்னதான் அவர்கள் அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதா எங்களுக்கு நல்ல பதவிகளை, உச்ச பதவிகளை வழங்கி இருக்கிறார். இந்த இயக்கம் எப்படி எல்லாம் பணியாற்றியது என்பதை கருத்தில் கொண்டு ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய முயற்சி. உறுதியாக இதில் வெற்றி பெறுவோம். கூட்டணியில் இருந்து நான் வெளியேறிய பிறகும் பாஜகவில் நல்லெண்ணத்துடன் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒன்றிணைவதை பாஜகவினரும் விரும்புகிறார்கள். நான் உட்பட யாரும் பதவி கேட்கவில்லை. பறிக்கப்பட்ட தொண்டர்களின் உரிமையை காக்கின்ற குழுவாகத்தான் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.
Follow Us