கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் 'திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன், ''அது அவருடைய விருப்பம். ஆனால் திமுக கூட்டணியில் அப்படி எந்த ஒரு சிக்கலும் இல்லை. கட்டுக்கோப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைய நிமிடம் வரை ஒரே அணியில் இருக்கிற கூட்டணி என்றால் அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான்'' என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், ''கல்வி நிலையங்களின் தலைமை பொறுப்பை ஆளுநர்கள் வகிக்க வேண்டும் எனவும், சனாதன அரசியலை ஊக்குவிப்பதற்கு ஆளுநர்களை பயன்படுத்த வேண்டும் என்கிற முயற்சியில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக இருந்து அரசாங்க சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் சட்டப்பூர்வமான கடமை. ஆனால் அதைத் தாண்டி அவர்கள் அரசியல் பேசுவதும் நாட்டுக்கு நல்லதல்ல.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஏற்கனவே குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அம்பேத்கர் இயக்கத் தலைவர்களில் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த, கட்சி சார்பற்ற அமைப்புகளுடன் கலந்துரையாடி இருக்கிறேன். கடந்த 20ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த கிறிஸ்தவ அமைப்புகள், சீக்கிய அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகள், பௌத்த அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களோடு ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். அடுத்து பிஹாரில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது'' என்றார்.
இயக்குநர் கவுதமன் இயக்கியுள்ள படம் குறித்த கேள்விக்கு, ''கவுதமன் என்ன படம் இயக்குகிறார், என்ன கதை பேசுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரை நான் அவர் இயக்கிய எந்த படத்தையும் பார்த்ததில்லை'' என்றார்.