சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் திருமணமான 70 நாட்களிலேயே வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் கொடுமைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதே போன்று திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவருடைய மகள் ப்ரீத்தி. இவருக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பெரியவர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்  போது 120 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பணம் குறித்து சதீஸ்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ப்ரீத்தியிடம் கேட்டு வந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ப்ரீத்தி குடும்பத்தாருக்கு இருக்கும் பூர்வீக சொத்தை வைத்து 50 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என சதீஸ்வர் பணத்தை வாங்கி வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ப்ரீத்தி  கடந்த ஒரு மாதமாக தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தாய் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு ப்ரீத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டிருந்த ப்ரீத்தியின் உடலை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வாங்க மறுத்து காவல் ஆணையர்  ராஜேந்திரனை முற்றுகையிட்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

திருப்பூரில் மீண்டும் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கும் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.