செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் அடிப்படையில் காப்பக உரிமையாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள ஊனமாஞ்சேரி பகுதியில் தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற நிலையில் உள்ள 18 சிறுமிகள் தங்கி பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அருள்தாஸ் மற்றும் அவருடைய மகள் பிரியா ஆகியோர் இந்த காப்பகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் ஆய்வுக்காக அந்த காப்பகத்திற்கு சென்றபொழுது சிறுமிகள் காப்பக உரிமையாளரின் கார் ஓட்டுநரால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமும் முறையிட்ட நிலையில் மாவட்ட குழந்தைகள் நலஅலுவலர் கொடுத்த புகார் அடிப்படையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவருடைய மகள் பிரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் தாம்பரத்தில் இதேபோல அரசு சேவை இல்ல காப்பகத்திற்கு புதிதாக சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காப்பகத்தின் காவலாளியால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வண்டலூரில் மீண்டும் சிறுமிகள் பலர் காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.