கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023 இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்து வருகிறது.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் ராகுல் காந்தி தலைமையில் ‘வாக்கு திருட்டு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி சஞ்சய் ராவத், சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிடோர் பங்கேற்றனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் 'இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் தனித்துவமான அனுபவத்தை கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி' என கிண்டல் செய்யும் வகையில் ராகுல்காந்தி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 'எக்ஸ்' பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அந்த பதிவில் 'வாழ்வில் பல சுவாரசிய அனுபவங்கள் கிடைத்தன. ஆனால் இறந்தவரோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இறந்தவர்கள் எனக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து தேநீர் அருந்தினேன்' என தெரிவித்துள்ளார்.