தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை, திமுக தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு இன்று (06.11.2025) சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்க்ளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தின் மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை மாற்றி அது வீழ்ச்சியான இடம். அந்த நம்பிக்கையில் இருந்து சரிந்து அது தொடர் சரிவில் இருக்கிற மேற்கு மண்டலம் என்பதைக் கடந்த தேர்தலில் பார்த்தோம். இப்போதும் அதுதான் நீடிக்கிறது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் இந்த போக்கு நீடிக்குமானால் இதுவரை இல்லாத அளவு, 2024இல் இல்லாத அளவு வீழ்ச்சியைச் சரிவை இழப்பைக் கட்டாயமாக எடப்பாடி பழனிசாமியும், அவரது தலைமையிலான அணியும் சந்திக்கும்.
திமுக ஒரு பெரிய நிறுவனம். திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய அணியும் மிக வலிமையான அணி. கிட்டத்தட்ட அது தொடர்ந்து தேர்தலில் வெற்றி மேல் வெற்றி பெற்ற அணி. ஆனால் நான் இந்த அணியில் இல்லாத போதே அணியில் இருப்பவர்களை விடக் கூடுதலாக இந்த அரசையும் இந்த அணியையும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை ஆதரித்து அவருடைய வளர்ச்சிக்கும், அவருடைய கருத்துக்கு வலிமையை ஊற்றுகிற வகையில் தனியரசும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும், என்னுடைய கட்சியும் வலிமையாக அவரை ஆதரித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் வயதான நடிகர் விஜய் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிற போது, திமுக தலைவரைத் தாக்குகிற போது எல்லாம் மிகக் கடுமையாகக் கண்டித்து விஜய்னுடைய அவதூற்றை, சதியை பாஜகவின் கருவியாக வருகிற விஜய்யை எல்லாம் கடுமையாகக் கண்டித்தேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/06/tvk-vijay-sad-2025-11-06-14-12-36.jpg)
கரூர் சம்பவத்தில் முதன் முதலாக விஜய்யைக் கைது செய்ய வேண்டும். வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும். முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதே தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தான். தனியரசு தான். அப்படி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இந்த அணிக்கும் பாஜகவாலோ, அல்லது விஜய் மாதிரியோ அல்லது வேறு எந்த வடிவத்தில் அச்சுறுத்தல் வருகிற போதெல்லாம் முதல் ஆளாகக் களத்தில் நின்று அரசை, இந்த அணியைப் பாதுகாத்த தனியரசு எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வமாக அணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிற சூழல் வாய்ப்பு வருமானால் அது குறித்து முடிவெடுக்க வேண்டியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தான்” எனத் தெரிவித்தார்.
அதேசமயம் தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பது, தமிழர் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தமிமுன் அன்சாரி, வேல்முருகன், தனியரசு ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/thaniyarasu-2025-11-06-14-11-57.jpg)