அமைச்சர் தங்கம் தென்னரசின் திருச்சுழி தொகுதியில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னழகு. இவருடைய கணவர் முத்துப்பாண்டி, 5 ஆண்டுகளுக்கு முன் காலமானார். வறுமையுடன் போராடி, விறகு வெட்டி, தனது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகிறார் பொன்னழகு. இவருடைய மகள் பூமாரி 2023ல் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது, 12ஆம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
பூமாரியின் இலக்கு மருத்துவம் படிக்கவேண்டும் என்பதே. வறுமையான வாழ்க்கைச் சூழலிலும், சேலத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்தது. பூமாரிக்கோ எம்.பி.,பி.எஸ். படிப்பு மீதுதான் ஆர்வம். அதனால், மீண்டும் நீட் பயிற்சி பெற்று, இந்த ஆண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றார்.
நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பூமாரிக்கு எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான இடம் கிடைத்தது. தனது விடாமுயற்சியினால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து, புலிக்குறிச்சி கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
தனது தொகுதியில், அதுவும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்த அளவுக்கு படிப்பில் தொடர்ந்து முன்னேறி வருகிறாரே என்பதை அறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பூமாரியை நேரில் அழைத்துப் பொன்னாடை போர்த்தி கவுரவித்துள்ளார். பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டபோதும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பூமாரி எடுத்த முயற்சிக்கு, அவருடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தது பெருமைக்குரிய செயல் என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார்.