Skip to main content

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய மண்டல துணை தாசில்தார்...!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

Zonal deputy who was caught by the anti-corruption police ...!

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தின் மண்டல துணை தாசில்தாராக இருப்பவர் சுல்தான் சலாவுதீன். இவரிடம் தங்களது பூர்வீக சொத்து தொடர்பாக பட்டா மாற்றம் செய்ய சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார் நெல்லை சட்டக் கல்லூரி மாணவர் முருகலிங்கம்.

 

சாத்தான்குளம் அருகேயுள்ள துவர்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகலிங்கம், அங்குள்ள தனது பாட்டி பூங்கனியின் பூர்வீக சொத்திற்குத்தான் பட்டா மாற்றம் செய்யக் கேட்டு சாத்தான்குளம் மண்டல துணை தாசில்தாரிடம் நடையாய் அலைந்தும், தாசில்தார் சுல்தான் சலாவுதீன் அவரை அலைக்கழித்திருக்கிறார். அதற்கு பிறகும் முருகலிங்கத்திடம் பட்டா மாற்றம் செய்ய துணை தாசில்தார் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

 

இதனால் முருகலிங்கம், நடந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்சம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாரிடம் புகார் செய்திருக்கிறார். அவர்களின் திட்டப்படி ரசாயனம் தடவிய நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை நேற்று (26.04.2021) மண்டல துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் பணமுமாகப் பிடித்தனர்.

 

அதன் பின் தாலுகா அலுவலக கதவுகளை மூடிவிட்டு, அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் மண்டல துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீனை கைது செய்தனர். லஞ்சம் காரணமாக மண்டல துணை தாசில்தார் பிடிபட்ட சம்பவத்தால் சாத்தான்குளம் அரசு அலுவலகங்கள் பரபரப்பிலிருந்தன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.