Skip to main content

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்திற்கு ஜீயர் கண்டனம்!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

Zeyer condemns plan to make all castes priests!

 

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம், அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார். சென்னை ஆர்.டி.எம்.புரத்தில் கடந்த 14ஆம் தேதி நடந்த நிகழ்வில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சி முடித்த 24 பேர் உட்பட 58 பேருக்கு, பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

 

''முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். சில ஊடகங்களும், சில முகநூல் நண்பர்களும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசுபோல் சித்தரிக்க நினைக்கிறார்கள். இந்துக்கள், இந்துத்துவா என்பதைக் கையில் எடுப்பவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்திற்காக இப்போது அர்ச்சகர் நியமனப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். யாரையும் கோவிலில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் கொடுக்கும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வலுசேர்க்க வேண்டும்'' என்று கடந்த 17ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இந்தத் திட்டதிற்கு அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பும் ஆதரவும் குவிந்துவருகின்றன.

 

 

Zeyer condemns plan to make all castes priests!

 

அதேநாள் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலினும், ''தமிழகக் கோவில்களில் ஏற்கனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்'' என விளக்கமளித்துப் பேசினார்.

 

இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயில் நடைமுறைகளை மாற்றியமைக்கக் கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியுள்ள ஜீயர், இந்தத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.