youtubers on the field to help the hospital

தமிழகத்தில் கரோனாவல் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. தினசரி 1,800க்கு குறையாத அளவுக்கு கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது பெரியளவில் பாதிப்பு குறைந்தாலும், இறப்பு என்பது அதிகாரப்பூர்வமாக தினசரி 5 முதல் 10 வரை செல்கிறது. பரப்பளவில் பெரிய மாவட்டமான திருவண்ணாமலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தவிர வேறு பெரிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனை எதுவும் கிடையாது. பெரியளவில் சிகிச்சை பெற வேண்டுமானால் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரு, வேலூர் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

Advertisment

கரோனா காலத்தில் படுக்கை இல்லாமல், குறிப்பாக ஆக்ஸிஜன் படுக்கை இல்லாமல் நோயாளிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். பழைய அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனையாக செயல்படும் மருத்துவமனை ஆகிய இடங்களில் அதிகளவு இடவசதியும் படுக்கைகளும் உள்ளன. அதனால் அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைக்கலாம் என முடிவு செய்தது திருவண்ணாமலையில் இயங்கும் ரோட்டரி பிரைட் அமைப்பு.

Advertisment

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தங்களது கருத்தைக் கூறியுள்ளனர். அவர் தனியார் நிறுவனங்களின் நிதியைத் தருவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இதனை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதனை அமைத்துத் தர 70 லட்ச ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சி.எஸ்.ஆர் நிதி, ரோட்டரி பிரைட் அமைப்பின் நிதி ஆகியவற்றைதந்து பணியை தொடங்கச் சொல்லியுள்ளார்கள். மீதி நிதிக்கு என்ன செய்வது என ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ரோட்டரி பிரைட் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியும், ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பரசு, யூடியூபர்கள் வழியாக நிதி பெறலாம் என முடிவு செய்து பேசியுள்ளார்கள். தமிழகத்தின் பிரபலமான யூ-டியூபர்ஸ்களான ஐயன். கார்த்திகேயன், தமிழ்கேள்வி செந்தில்வேலன், பிரசன்னா, ஆவுடையப்பன், மதன், ஹாசிப், குருபாய், மாரீஸ், மைனர், சுமி, நக்கலைட்ஸ், அரவிந்த், விஜய் வரதராஜ், ஜென்ராம், ப்ளாக் ஷீப், ஜென்சன் என 26 யூடியூபர்கள் இணைந்து தமிழ் டிஜிட்டல் கிரியேட்டர் அசோசியேஷன் என்கிற பெயரில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

மே 30ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 11 வரையென இடைவிடாமல் 6 மணிநேர நிகழ்வை அனைத்து சேனல்களிலும் லைவ்வாக ஒளிப்பரப்பியது. பறை இசையோடு தொடங்கிய நிகழ்வில், ஏப்பம்பட்டி அணி, பாப்பம்பட்டி அணி என அணிகளாக பிரிந்து நகைச்சுவை நிகழ்ச்சிகள், முக்கிய யூடியூபர்கள் சந்தித்த மனிதர்கள், மறக்க முடியாத நிகழ்வுகள் என பலவற்றைப் பார்வையாளர்கள் சிரிக்க சிரிக்க பகிர்ந்துகொண்டனர்.

youtubers on the field to help the hospital

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி கலந்துகொண்டு பேசும்போது, “இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதையும், அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றுவதும் மகிழ்வாக இருக்கிறது”. என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது பாடல் குறித்தும், ரசிகர்கள் எழுப்பும் கேள்விகள், பாராட்டுகள் குறித்தும் சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் அமைக்க நிதி தரலாம் என அதற்கான லிங்க் ஒன்றைப் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடியும்போது 20 லட்ச ரூபாய் நிதி வந்துள்ளது. அதன்பின் தற்போதும் தொடர்ச்சியாக நிதி வந்துகொண்டே இருக்கிறதாம். தற்போதுவரை 22 லட்ச ரூபாய் திரண்டுள்ளதாக கூறுகிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.

சில வாரங்களுக்கு முன்பாக இதேபோல் கரோனா நிதி திரட்டல் என இந்தியா முழுவதுமுள்ள யூடியூபர்கள் இணைந்து நடத்திய நிகழ்வில் 50 லட்ச ரூபாய், கேரளா மாநில யூடியூபர்கள் நடத்திய நிகழ்வில் 1 லட்சம் என குறைவாகவே வசூலானது. ஆனால், தமிழகத்தில் நடந்த நிகழ்வில் 22 லட்ச ரூபாய் வந்தது ஒருங்கிணைப்பார்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

நிதி தந்தவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிடும்போது, என் அண்ணன் இறந்தார், என் தாய் இறந்தார், என் தந்தை இறந்தார். ஆக்ஸிஜன் இல்லாமல் இனி யாரும் இறக்ககூடாது என்பதற்காகவே நிதி வழங்குகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அதனை வாசிக்கும்போதே மனம் கலங்கியது. அந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசே எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது. மக்கள், தங்களின்பங்களிப்பு இருந்தால் மட்டுமே சரிசெய்ய முடியும் என நினைப்பதால்தான் நிதி தந்துள்ளார்கள்.

அடுத்ததாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக இதேபோன்று ஒரு நிகழ்வு நடத்தலாம் என ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் திரைப் பிரபலங்களையும்,இன்னும் அதிக அளவில் யூடியூபர்களையும் கலந்துகொள்ள வைப்பது என முடிவு செய்துள்ளனர்.