YouTuber Savukku Shankar house incident 5 people arrested

யூடியூபர் சவுக்கு சங்கர் கழிவுநீர் அகற்று சேவை வாகனங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தமிழக அரசு குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதே சமயம் சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் (24.03.2025) திரண்டனர். அதோடு அவர்கள் திடீரென வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தினர். மேலும் வீட்டுக்குள் கழிவுநீரையும், மனித கழிவையும் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. அதோடு சவுக்கு சங்கரின் தாயாருக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். அதே சமயம் இது தொடர்பாகச் சவுக்கு சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். சிபிசிஐடி டி.எஸ்.பி. சசிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.