/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_127.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து பழனி நகர டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்களைத்தேடி வருகின்றனர். ஏற்கெனவே பழனி நகரில் உள்ள அடிவாரம், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன் உள்பட சில இடங்களிலும் அதுபோல் பழனியைச்சுற்றியுள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்பட சில இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_147.jpg)
இது சம்மந்தமாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “அந்த வீடியோ குறித்து விசாரணை செய்து, அந்த இளைஞர்களைத்தேடி வருகிறோம். கூடிய விரைவில் கைது செய்வோம். இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை ஏற்கனவே கைது செய்து இருக்கிறேன். மேலும் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவலும் வந்திருப்பதால் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து சமூக விரோத செயலில் ஈடுபடும் அந்தக் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இருப்பினும், பழனியில் இதுபோன்ற வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி, கொடைக்கானலில் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கையும்களவுமாக பிடிக்க எஸ்பி பிரதீப் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தார். அதுபோல் தற்போது பழனி மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இது சம்மந்தமாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும் மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் தொடர்பு கொண்டு பழனி உட்பட சில இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் வருவதால் அதை ஒடுக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)