/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20yrs-imprisonmenrt.jpg)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது செவ்வேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சின்னத்துரை(22). இவர் அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியைக் காதலித்து திருமணம் செய்வதாகஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அப்படி மறுத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சின்னத்துரை கூறியுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்திற்குத்தெரியாமல் சிறுமியைத்தனது நண்பர்கள் ஆதனூர், மாயவேல் செவ்வேரி, பிரதாப், சரத் பாபு, ஆகியோர் துணையுடன் கடந்த 2019 ஏப்ரல் 12ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்களது புகாரின் பேரில் போலீசார் சிறுமியைக் கடத்திச் சென்ற சின்னத்துரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மாணவியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இளைஞர் சின்னத்துரைக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளின்படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சின்ன துரையின் நண்பர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கலைச்செல்வி சிறப்பாக வாதாடி சிறுமியைக் கடத்திய இளைஞருக்குத்தண்டனை கிடைக்க உதவியுள்ளது என்கிறார்கள் கடலூர் வழக்கறிஞர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)