
காதலிப்பதாகச் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சாய்நாதபுரத்தைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் கடந்த 22ஆம் தேதி வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து சிறுமியைத் தேடிவந்த நிலையில் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னை சென்ற சிறுமியின் உறவினர்கள் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பின் சம்பந்தப்பட்ட இளைஞரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் ஒரு இடத்தில் தனியாக அடைத்து வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கோகுல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாகச் சிறுமியின் தந்தை உட்படச் சிறுமியின் உறவினர்கள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த வழக்கைக் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் அது வரை உடலை வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Follow Us