Skip to main content

“தொடர்பை விட்டுடுன்னு சொன்னோம்... கேட்கல, அதான் கொன்னுட்டோம்” - பரபரப்பு வாக்குமூலம்      

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

youth who incident a friend along with an accomplice

 

சேலம் அருகே, நண்பனின் மனைவியுடனான திருமணத்தை மீறிய  உறவைக் கைவிடுமாறு கூறியும் மறுத்ததால் பெட்ரோல் நிலைய ஊழியரைக் கொலை  செய்தோம் எனப் பிடிபட்ட 5 பேர் கும்பல் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.    

 

சேலத்தை அடுத்த திருமலைகிரியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (22). கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரைச் சேர்ந்தவர் அரவிந்த் (21). இவர், அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தார்.  அரவிந்த்தும், மனோஜ்குமாரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் மனோஜ்குமார் வீட்டிற்கு அரவிந்த் அடிக்கடி சென்று வந்தார். அப்போது  அவருடைய மனைவியுடன் அரவிந்த்துக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. மனோஜ்குமார் வீட்டில் இல்லாத நேரங்களில் அவருடைய  மனைவியும், அரவிந்த்தும் ரகசியமாகச் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.     

 

இதை அறிந்த மனோஜ்குமார், தனது நண்பரையும் மனைவியையும் கண்டித்துள்ளார். அதைப் பொருட்படுத்தாத அவர்கள் மீண்டும் ரகசியமாகச் சந்தித்து உறவை வளர்த்து வந்துள்ளனர். அரவிந்த் உயிருடன் இருக்கும் வரை தன்னால் மனைவியுடன் சந்தோஷமாக வாழ முடியாது என முடிவு செய்த மனோஜ்குமார், அவரைத்  தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதற்காக அவர், பெரிய புத்தூரைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் கவுரிசங்கர் (25), ராமச்சந்திரன் (26), ரத்தினம் (33), கார்த்தி (21) ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் மனோஜ்குமாரின் திட்டத்துக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.     

 

இதையடுத்து, ஜூலை 18ம் தேதி இரவு 8 மணியளவில், அரவிந்த்தை மது குடிப்பதற்காக மனோஜ்குமாரும் கூட்டாளிகளும் அழைத்துள்ளனர். அழைப்பை ஏற்று அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற அரவிந்த்திடம், இனிமேல் மனோஜ்குமாரின் மனைவியைச் சந்திக்கவோ, பேசவோ கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது மனோஜ்குமாரும், கூட்டாளிகளும் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட மரக்கட்டையால் அரவிந்த்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். நிலைகுலைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். துரத்திச்சென்ற அந்த கும்பல், சரமாரியாகத் தாக்கியதில் அரவிந்த் அங்கேயே மயங்கி விழுந்தார்.     

 

நிகழ்விடத்தில் இருந்த சிலர் அரவிந்த்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி,  ஜூலை 19ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்திருந்த கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அரவிந்த்தின் மரணத்திற்குப் பிறகு கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மனோஜ்குமார், கவுரிசங்கர், ராமச்சந்திரன், ரத்தினம், கார்த்திக் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். மனோஜ்குமாரின் மனைவியுடனான தொடர்பை விட்டுவிடுமாறு கூறியதாகவும், அதற்கு அரவிந்த் மறுத்ததால் போட்டுத்தள்ளி விட்டதாகப் பிடிபட்ட நபர்கள்  கூறியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்