Advertisment

“புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை” - கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்

youth tried to set lost their life to the Erode Collector office

Advertisment

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பி.மேட்டுப்பாளையம், பூமாண்டக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (35) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக கேட் முன்பு திடீரென வாட்டர் பாட்டிலில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் உடனடியாக ஓடி வந்து அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

அப்போது ஜெயக்குமார் போலீசாரிடம் கூறியதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை. இதனால் எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் கட்டித் தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு வருகிறோம். இதனை அடுத்து எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் கேட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடிசைகள் போட்டும், சிமெண்ட் செட்டுகள் போட்டும், ஆடு மாடுகளை கட்டியும், ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவருக்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர்.

இது குறித்து நான் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கிட்டத்தட்ட 2 வருடங்களாக கழிப்பிடம் கட்ட போராடி வருகிறேன். நான் ஊர் மக்கள் நன்மைக்காக பாடுபட்டு வருகிறேன். இது சம்பந்தமாக பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் மனு கொடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லியும் அவர் அகற்றாமல் உள்ளார். எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அந்த இடத்தை மீட்டு கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்” எனக் கூறினார். இதனை அடுத்து சூரம்பட்டி போலீசார் ஜெயக்குமாரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe