விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; நீதிபதி விசாரணை!

svg-ajith-judge-std

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மதுரையைச் சேர்ந்த சிவகாமி என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் வயது முதிர்ந்தவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அஜித்திடம் சாவியைக் கொடுத்து காரை பார்க் செய்யுமாறு சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜித்தும் அவர்களுடைய காரை பார்க் செய்துவிட்டு சாவியை கொடுத்துள்ளார். இதனையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சிவகாமி குடும்பத்தினர் காரில் இருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை எனத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைஞர் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் கோவிலின் செயல் அலுவலகத்தில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை பைப்புகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் பைப்புகள் உடைந்து சிதறி கிடக்கும் புகைப்படங்கள்  வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் காரணமாகக் கோவிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாகத் தனிப்படை காவலர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி ஆசித் ராவத் உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மதுரையில் நீதிபதி வேங்கடப்பிரசாத் அஜீத்குமாரின் தம்பி, அக்கா மற்றும் அவரது அம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடமும், உறவினர்களிடமும் விரிவான விசாரணை நடத்தினார். அதேசமயம் அஜித்குமார்  உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த உடற்கூறாய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினரின் சித்திரவதைகளால் உயிரிழந்தவர்களுக்கு உடல் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும்  போது என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுமோ அந்த நடைமுறைகளின் அடிப்படையில் இந்த உடற்கூராய்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீதிபதி வேங்கடபிரசாத் அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார். இதனையடுத்து அஜித்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான மடப்புரத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அதே சமயம் மாஜிஸ்ட்ரேட் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? தனிப்படை காவலர்கள் கைது செய்யப்படுவார்களா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Investigation Judge madurai sivagangai
இதையும் படியுங்கள்
Subscribe