Skip to main content

வனவிலங்குகளை தடுக்க வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை கிராமத்தில் வசிப்பவர் மகாதேவன். இவரது நிலத்துக்கு அடிக்கடி யானை, மான், முயல், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வந்து பயிர்களை மேய்ந்துவிட்டு சென்றுவிடுகிறதாம். இதனால் மகாதேவன் தனது விவசாய நிலத்தில் வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்து வைத்துள்ளார். இரவு நேரத்தில் மின்வேலியில் மின்சாரம் பாய்ச்சப்படுமாம்.

 

Youth stuck with electric wire

 



இந்நிலையில் மகாதேவன் நிலத்தின் வழியாக தனது விவசாய நிலத்திற்கு சென்ற சந்தோஷ் என்ற இளைஞர் மார்ச் 3ஆம் தேதி விடியற்காலை மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனை சிலர் மறைக்கப்பார்த்துள்ளனர். அப்பகுதி இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த பள்ளி கொண்டா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்திருப்பதை அறிந்து மகாதேவனை போலீஸார் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 

Next Story

இளைஞர் மர்ம மரணம்; மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது தடியடி

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Relatives struggling youth mysterious incident

கடலூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மகன்(20) அன்புராஜ். இவர் தனது நண்பர்கள் முத்துராஜ், பாலமுருகன், ஆகியோருடன்  12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் பெண்ணாடத்தில் இருந்து தனது ஊரான கூடலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் பெண்ணாடம் காவல் நிலையம் அருகே இரவு நேர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அன்புராஜின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். அவருடன் வந்த அவரது நண்பர்கள் இருவர் உட்பட 3 பேரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு மறுநாள் வந்து எடுத்துக் கொள்ளுமாறு கூறிய போலீசார் அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்களுடன் இளைஞர்களை அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அன்று நள்ளிரவு 2 மணி அளவில் பொன்னேரி பஸ் நிறுத்தம் அருகே தலையில் ரத்தக் காயத்துடன் அன்புராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பெண்ணாடம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த அன்புராஜின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், 14 ஆம் தேதி மதியம் அன்புராஜ் உறவினர்கள், அன்புராஜின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கூடலூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்யராஜ், திட்டக்குடி டி.எஸ்.பி மோகன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், முதல் நாள் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புராஜ் மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறினர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுத்த அன்புராஜின் உறவினர்கள், அன்புராஜின் இறந்த உடலைக் கொண்டு வந்து சாலையில் வைத்துப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 

காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தப்படும் என்று எடுத்து கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் இரவு 7 மணி அளவில் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதைக் கண்டதும் அங்கிருந்த சிலர் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனையடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். கற்கள் வீசப்பட்டதில் காவல்துறை வாகனம் சேதமடைந்தது. இதில்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தடியடிக்குப் பிறகு கூட்டம் கலைந்தது.