
சேலம் அருகே, காதல் தோல்வியால் விரக்தி அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் - வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் மே 30ம் தேதி இரவு, இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதாக சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்த இளைஞர், கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த சிவா (21) என்பதும், இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. வடலூரில் ஒரு பெண்ணை சிவா காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த சிவா, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, காதல் தோல்விதான் தற்கொலைக்கு காரணமா? அல்லது கல்லூரியில் மற்றவர்களுடன் ஏதேனும் பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.