
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான வெற்றிச்செல்வன், கட்டுமானப் பணியில் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை (07 பிப்.) மாலை, வேலை முடிந்து வீடு திரும்பியபோது ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சிலர் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பொதுவெளியில் இப்படி ரகளை செய்யலாமா என்று வெற்றிச்செல்வன் கேட்டதால், ஏற்கனவே கொலை முயற்சி உட்பட பலவழக்குகளில் சிறையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்துள்ள ஆலங்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (29), கஞ்சா போதையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெற்றிச்செல்வனை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வெற்றிச்செல்வனை மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வெற்றிச்செல்வனின் உறவினர்கள் இதனைக் கண்டித்து, பாத்தம்பட்டியில் பஸ் மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதில், பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
வெற்றிச்செல்வனை வெட்டிவிட்டுத் தப்பிய அப்துல் ரகுமான், அம்புலி ஆற்றுப் பாலம் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக ஆலங்குடி போலீசாருக்குத் தகவல் வந்தது. ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான போலீசார் படுகாயமடைந்த அப்துல் ரகுமானை, மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு வரும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் ஆலங்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.