Skip to main content

இளைஞரை அடித்துக் கொன்ற உறவினர்கள்..! 

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

Youth passes away near viluppuram police arrested two

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் வீரமுத்து. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அண்ணாமலைக்கும் அவரது உறவினர் சுந்தரம் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலம் பாகம் பிரிப்பது சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (11.09.2021) மாலை சுந்தரம், தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு தங்கள் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்துவிட்டு அங்கேயே இரவு தங்கியிருந்துள்ளனர். நள்ளிரவு ஒருமணி அளவில், கிராமப் பகுதியில் உள்ள சுந்தரம் வீட்டிற்குச் சென்ற வீரமுத்து, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும், வீட்டில் உள்ள டி.வி., கட்டில் உட்பட அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தி தீ வைத்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த சுந்தரம், அவரது மனைவி ரத்தினம், அவர்களது மகன்கள் விஜயகுமார், ராஜேந்திரன் ஆகியோர் அதிகாலை 3 மணியளவில் வீரமுத்துவை தேடி வந்தனர். 

 

வீரமுத்து, இவர்கள் வருவதை அறிந்து பயந்துபோய் அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஓடி ஒளிந்துகொண்டார். அங்கு துரத்திக் கொண்டு உள்ளே சென்ற மூவரும் வீரமுத்துவை தேடியுள்ளனர். மாலை 5 மணி அளவில் வீரமுத்து, கரும்பு தோட்டத்திலிருந்து தப்பி அழகேசன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து பதுங்கியுள்ளார். அங்கு துரத்திச் சென்ற விஜயகுமார், ராஜேந்திரன் அவரது தாயார் ரத்தினம் ஆகியோர் கல்லாலும் தடியாலும் வீரமுத்துவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின் இறந்துபோன வீரமுத்துவின் உடலை இழுத்துவந்து அவரது வீட்டில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்தத் தகவல் செஞ்சி காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. 

 

அதையடுத்து செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வீரமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீரமுத்துவின் தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் கொலை வழக்குப் பதிவுசெய்து, இதற்கு காரணமான விஜயகுமார், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரத்தினத்தை தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்