
கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி நண்பர்களுடன் வெளியே சென்ற இளைஞர் பலியாகியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிக்கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ் அஹமத். 29 வயதான இம்தியாஸ், மே 26ஆம் தேதி காலை தனது நண்பர்களுடன் ஆணைமடுகு தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையால் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக இருந்தது. மேலிருந்து தண்ணீரில் குதித்து நீந்திக்கொண்டு விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இம்தியாஸ் மேலிருந்து குதிக்கும்போது தடுப்பணையின் தரையில் இருந்த சகதியில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலே வர முடியாமல் நீரில் மூழ்கியுள்ளார். நீருக்குள் குதித்தவர் நீண்ட நேரமாக மேலே வராததால் நண்பர்கள் நீரில் மூழ்கி நாற்புறமும் தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
அதன்பின் ஆம்பூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கூற, தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் தடுப்பணையில் நீந்திச் சென்று, 2 மணி நேர தேடுதலில் இம்தியாஸ் உயிரற்ற உடலை மேலே கொண்டுவந்தனர். இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இம்தியாஸ்க்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தாரும், உறவிர்களும் அழுத அழுகை மற்றவர்களையும் கலங்கச் செய்தது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என அறிவுரை கூறி அங்கு வந்த இளைஞர்களை அனுப்பிவைத்தனர் காவல்துறையினர்.