/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_57.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பிரகாஷ், ஆனந்தராஜ், அபி மற்றும் ஆகாஷ். இவர்கள் நான்கு பேரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோமுகி ஆற்றங்கரை பகுதிக்குச் சென்றனர். இவர்கள் நால்வரும் கோமுகி ஆற்றங்கரையில் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு தண்ணீரில் குளிக்கும்போது ஆனந்தராஜ் ஆற்றில் மூழ்கி மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
இதுகுறித்து ஆனந்தராஜின் தந்தை, தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனந்தராஜ் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து ஆனந்தராஜுடன் சென்ற நண்பர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில், அந்த நண்பர்களில் ஒருவரான பிரகாஷ் (21), போலீஸ் விசாரணைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர், தனது தாய்மாமா கணேசன் ஊரான மேலூர் சென்று தங்கியுள்ளார். நேற்று (03.08.2021) காலை 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஓடை அருகே பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மாமா கணேசன் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.
ஆற்றில் மூழ்கி இறந்துபோன ஆனந்தராஜ் சம்பவம் குறித்து பிரகாஷ் உட்பட அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணைக்குப் பயந்து பிரகாஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணை வளையத்தில் இருந்த ஒரு நபர் தற்போது தற்கொலை செய்துகொண்டிருப்பதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேலும் தங்களது விசாரணையைத் தீவிரமாக்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)