Skip to main content

சென்னையில் பயங்கரம்; இளைஞரை கொடூரமாக கொன்ற கும்பல்! 

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

Youth passes away in chennai police searching the gang

 

சென்னை அயனாவரம், தலைமைச் செயலக குடியிருப்பு காலணி, குட்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் 26 வயதாகும் கருணா. இவர் சென்னை அயனாவரத்தில் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே துக்க நிகழ்ச்சி ஒன்றில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கருணா உட்பட அவரது நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்தக் கும்பலில் இருந்த யோனா என்ற இளைஞர் மீது கல்லை போட்டுள்ளனர். இதில் காலில் பலத்த காயமடைந்த நிலையில்  யோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருணா உட்பட அவரது நண்பர்கள் 6 பேர் மீது 307 கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இந்நிலையில் கருணா கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த கருணாவை பழி தீர்க்கும் விதமாக யோனா மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் சேர்ந்து நேற்று இரவு 9.30 மணியளவில் கர்ணாவின் அக்கா வீட்டருகே வைத்து, அவர் தலையின் மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

 

இந்தக் கொலை தொடர்பாக தலைமைச் செயலக குடியிருப்பு காலணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கருணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஏழு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர். 

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, குற்றவாளிகள் ஏழு பேரில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவித்தனர்.

 

கருணாவின் தந்தை ரவி என்னும் ஆட்டோ ரவி கடந்த 2015 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தற்பொழுது அவரது மகனும் அதே பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்