Skip to main content

மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டதால் ஆத்திரம்; வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

youth passed away police arrested two

 

ஓசூர் அருகே சூதாட்டத்தில் தன்னை வென்ற நண்பர்களிடம் மதுபானம் 'டிரீட்' கேட்டதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காரப்பள்ளியைச் சேர்ந்தவர் மோகன் (27). கூலித்தொழிலாளி. சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ் (24) மற்றும் மூர்த்தி (20). இவர்கள் மூவரும் நண்பர்கள். யுகாதி பண்டிகை நாளான மார்ச் 22ம் தேதி, இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்று பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். சூதாட்டத்தில் உமேஷ், மூர்த்தி ஆகியோரிடம் 20 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி மோகன் தோற்றுவிட்டார். 

 

பணத்தை இழந்த விரக்தியில் மோகன், அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் அதே கடைக்குச் சென்றனர். அவர்களைப் பார்த்த மோகன், சீட்டாட்டத்தில் தன்னுடைய பந்தய பணத்தை ஜெயித்ததால், அதிலிருந்து தனக்கு மதுபானம் வாங்கி 'டிரீட்' கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மதுபானம் வாங்கித் தர மறுத்ததோடு, மோகனை ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. 

 

அப்போது ஆத்திரம் அடைந்த உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஒளித்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மோகன் சரிந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். 

 

நிகழ்விடத்தில் இருந்தவர்கள் மோகனை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 23ம் தேதி காலை மோகன் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக உமேஷ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்