Skip to main content

குண்டாஸிலிருந்து விடுதலையான இளைஞர் படுகொலை; மயிலாடுதுறையில் பரபரப்பு

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

youth passed away in maiyladudhurai

 

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

மயிலாடுதுறை நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் வன்னியர் சங்க நகரச் செயலாளராக இருந்தவர். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் தலையிடுவதோடு, சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்தும் தொழில் செய்துவருகிறார். இவருக்கும் மயிலாடுதுறை நகரத்தில் உள்ள கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. 

 

இந்த விவகாரத்தில் கண்ணன், கதிரவனை தாக்கியிருக்கிறார். இது கதிரவனுக்கு அவமானமாக இருந்துள்ளது. இதனால், அவர் கண்ணன் மீது கடும் கோபத்தில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்துவந்தார்.

 

இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுதலையாகி ஊருக்கு வந்த கண்ணன், வழக்கம்போல் பழைய பானியிலேயே உலாவந்துள்ளார். இந்தசூழலில் நேற்று இரவு நல்லதூக்குடி ரஞ்சித், டபீர் தெரு திவாகர் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் உலா வந்திருக்கிறார். பின்பு வீட்டுக்கு திரும்பும்போது புதிய பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த கலைஞர் காலனியைச் சேர்ந்த அஜீத், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணனைத் தாக்கியுள்ளனர்.  இதைப் பார்த்து ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்த கண்ணனுடன் வந்த ரஞ்சித் மற்றும் திவாகர் தப்பி ஓடி உள்ளனர். அதன்பிறகு அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.


தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்ப இடத்திற்குச் சென்று கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதோடு, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதனை ஆதாரமாக கொண்டு வழக்குப் பதிவு செய்ததோடு அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பளைத் தேடி வருகின்றனர். அதோடு கொலை நடந்த போது கண்ணனுடன் வந்த டபீர் தெரு திவாகரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மயிலாடுதுறை நகரம் முழுவதும் பரபரப்பாகியுள்ளது. நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Leopard movement; Holiday notification for 9 schools

இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இரண்டு நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை தீயணைப்புத் துறையினர் என மொத்தம் 61 பேர் சிறுத்தை தேடுதல் வேட்டையில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி நாளை (04/04/2024) அந்த  உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டுவிடும் என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘ஆபாச வீடியோவை வெளியிடுவோம்’ - ஆதீனத்தை மிரட்டிய பா.ஜ.க மாவட்டத் தலைவர்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
 BJP district president threatens Adinath in mayiladurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த நிலையில், தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.