Skip to main content

ஏரியில் மிதந்த ஹெல்மெட்; திடீரென வீசிய துர்நாற்றம் - அதிர்ச்சியில் அலறிய ஊர்மக்கள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Youth passed away in lake near Minjur

 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூருக்கு அருகே அமைந்துள்ளது நாலூர் கிராமம். இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த ஊரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அருகில் உள்ள ஏரிப்பகுதியில் இயற்கை உபாதைகள் கழிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த ஏரிப்பகுதியில் பயங்கரமாகத் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த ஏரிப்பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர்.

 

அப்போது, அந்த இடத்தில் 38 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரின் சடலம் பாதி அழுகிய நிலையில் ஏரியின் மேல் மிதந்துள்ளது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். அதன்பிறகு, இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியின் மையத்தில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்பதற்காகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏரியில் இறங்கி அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்தனர். மேலும், மீட்கப்பட்ட சடலத்தின் தலையில் தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தும் பாதுகாப்பு ஹெல்மெட்டும் இருந்துள்ளது. அதே வேளையில், அந்த இளைஞரின் பாக்கெட்டில் எந்த ஆவணங்களும் இல்லாததால் உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இத்தகைய சூழலில், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏரியில் கிடைத்த சடலம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த நபர் வடமாநிலத் தொழிலாளியாக இருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார் அங்குள்ள தொழிற்சாலைகளில்  கட்டுமான பணியாளர்கள் யாரேனும் காணாமல் போனார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.

 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த நபர் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவருடைய பெயர் சத்யா என்பதும் தெரிய வந்துள்ளது. 38 வயதான சத்யா, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், உயிரிழந்த சத்யா சம்பந்தப்பட்ட பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க வந்தபோது ஏரியில் தவறி உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ஏற்கனவே, கடந்த வாரத்தில் மீஞ்சூரில் உள்ள கிணற்றில் இளைஞரின் சடலம் கிடந்ததும், விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. தற்போது, மீண்டும் ஏரியில் சடலமாக ஒருவர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், மீஞ்சூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்