Skip to main content

காதல் பிரச்சனை? - கொலை செய்து உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Youth passed away due to love problems

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் மகிழன்(17 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி  காலை வீட்டை விட்டு வெளியில் சென்ற மகிழன் இரவு வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அவரது தந்தை இளையபெருமாள், மகன் காணவில்லை என்று 3 ஆம் தேதி சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். 

 

இந்த நிலையில் பேரூர் அருகே உள்ள குறிஞ்சிகுடி கிராமத்தில் உள்ள பாஸ்கர் என்பவரது கிணற்றுக்கு அருகே மகிழனின் செல்போன் கிடந்துள்ளது. இதனைக் கைப்பற்றிய போலீஸார், விசாரணை செய்து கொண்டிருந்தபோது கிணற்றில் ஒரு பொருள் கிடப்பதுபோல தெரிந்துள்ளது. போலீஸார் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது ஒரு உடல் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் கல்லைக் கட்டிப் போட்டிருப்பதும் தெரிய வந்தது. 

 

உடலைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது மகிழன் என்பது தெரிய வந்தது. போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதல் பிரச்சனையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது’ - போலீசார் அதிரடி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
In another case MR. Vijayabaskar Arrested Police Action

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.  மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 7 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் இத்தகவலை தெரிவிப்பதற்காக நீதிமன்றத்தில் வாங்கல் காவல் துறையினர் பெற உள்ளனர். 

Next Story

சொத்து தகராறு; அண்ணனின் வீட்டைச் சூறையாடிய தாய், தம்பி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Mother and brother robbed brother  house due to property dispute

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது புருஷோத்தம குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சம்பத். இவர் அதே பகுதியில் தாய் வனிதா பெயரில் இடம் ஒன்றைப் பணம் கொடுத்து வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பத்தின் தம்பி நேரு, புதிதாகக் கட்டிய வீட்டில் தனக்கும் பங்கு வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதனால் சம்பத்  ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரி ஒன்றை வாங்கி தனது தம்பி நேருவுக்குக் கொடுத்துள்ளார். இருப்பினும் லாரி வாங்கிக் கொடுத்தது போதாது, வீட்டிலும் பங்கு வேண்டும் என்று சம்பத்திடம் மீண்டும் தகராறு செய்திருக்கிறார்.

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வழக்கறிஞர் சம்பத்தின் வீட்டைத் தாய் வனிதா மற்றும் சகோதரர் நேரு இருவரும் சேர்ந்து உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பத்தின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சொத்து தகராறில், தம்பி மற்றும் தாய் ஒன்று சேர்ந்து அண்ணன் வீட்டை அடித்து உடைத்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.