Youth met accident and struggle due no ambulance

திருச்சி டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(22). இவரின் உறவினர் ஒருவர் ஜெயங்கொண்டத்தில் உயிரிழந்துள்ளார். அதன் காரணமாக அந்த துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இவர், தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் ஜெயங்கொண்டம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.

Advertisment

அவர் அரியலூர் அருகில் உள்ள கீழப்பழுவூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த தகவல் பலகையில் அவரது வாகனம் மோதியது. இதில், ஆகாஷின் இடது கால் துண்டித்த நிலையில், ரத்த வெள்ளத்தில் வலியில் துடித்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அவரது நிலையை பார்த்துவிட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. ஒரு மணி நேரம் கடந்த பிறகு அரியலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஆகாஷ் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ஏற்கனவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று அரியலூர் மாவட்ட கீழப்பழூரில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. கடந்த பல மாதங்களாக அந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அரியலூரில் இருந்து ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. கீழப்பழுவூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை இருந்திருந்தால் விபத்தில் சிக்கிய ஆகாஷ் என்பவரை விரைந்து உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்திருக்கலாம். எனவே மீண்டும் கீழப்பழுவூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.