youth lost their life by posting a video

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த கல்லுகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் மகன் பிரவீன்(30). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி(28) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த தம்பதியினருக்குக் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது கணவரிடம் இருந்து பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அம்மா வீட்டில் இருந்தபடியே நந்தினி புதுப்பேட்டைச் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரவீன் பலமுறை நந்தினியை தன்னுடன் வந்து சேர்ந்து வாழும்படி அழைத்தும் அவர் மறுத்துவிட்டதால் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி நந்தினி வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று, மனைவியை தன்னுடன் வாழ வரவேண்டும் என்று அழைத்துள்ளார். ஆனால் நந்தினி வர மறுத்ததால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை பிரவீன் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் நந்தினி சத்தமிட, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பிரவீன் திருப்பத்தூர் நகரக் காவல்நிலையத்தில் தினந்தோறும் நேரில் சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சலில் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேபோல் நேற்றும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisment

அந்த வீடியோவில், “எனது மனைவி நந்தினிக்கும் அவர் பணியாற்றும் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீதர் என்பவரும் வாட்ஸ் அப் சேட்டிங் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கேட்கச் சென்ற போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு நான் வரை கத்தியால் குத்தினேன். அதனால் தற்போது சிறைக்கு சென்று வந்துள்ளேன். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீச்சர் என்னை அழைத்துச் சென்று அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். மேலும் தான் வாங்காத நகையை வாங்கியதாகக் கூறி அதனைத் திருப்பி தரும்படி வற்புறுத்தி எனது மனைவிக்கு ஒருதலைபட்சமாகச் சாதகமாகச் செயல்பட்டனர். இதன் காரணமாக தற்போது மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன்” எனக்கூறியுள்ளார்.

மேலும், இனிமேல் நான் இருக்கப் போவதில்லை என்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதை வீடியோவை பதிவு செய்துவிட்டு பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.