/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1713.jpg)
கள்ளக்குறிச்சி - கடலூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.சி. பட்டதாரி இளைஞர் விஜய்(24). இவர், அதே ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றைத்துவக்குவதற்காக இணையதளம் மூலம் கடந்த ஜூலை மாதம் விஜய் விண்ணப்பித்துள்ளார்.
சில நாட்கள் கழித்து அவ்வப்பொழுது விஜய்யின் தொலைப்பேசி எண்ணிற்குத்தொடர்புகொண்ட ஒருவர் விஜய்யிடம் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்குவதற்கு இணையவழியில் விண்ணப்பித்துள்ளது பற்றியும், சேவை மையம் துவக்குவதற்கு வங்கி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெபாசிட் தொகை, பணப்பரிவர்த்தனை தொகை, வங்கி சேர்ந்த குழுவினர் சேவை மையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வருவதற்கான கட்டணம் என இப்படி பலவிதமான கட்டணத்தைக் கூறி அதற்கான பணத்தைச் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அந்த நபர் கூறியபடி, விஜய் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 97 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த நபருக்கு அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். பணம் செலுத்தி ஒரு மாதத்திற்கு மேலாகியும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் அமைக்க எந்தவிதமான பணிகளும் தொடங்க அனுமதி தரவில்லை. மேலும் சேவை மையம் அமைய உள்ள இடத்தை பார்ப்பதற்காக எந்த அதிகாரி குழுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தன்னைத்தொடர்பு கொண்டு பணம் செலுத்தக் கூறிய அந்த நபரிடம், வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் அமைப்பதற்கு எந்த அனுமதியும் தாங்கள் கூறியபடி நடக்கவில்லை. எனவே தான் அனுப்பிய பணத்தைத்திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் அந்தப் பணத்தைத்திருப்பி தர வேண்டுமானால் மேலும் 10,000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படிச் செலுத்தத் தவறினால் ஏற்கனவே செலுத்திய பணத்தைத்திரும்ப பெறுவதற்கு மூன்று மாத காலம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் தன்னிடம் மோசடியாகப் பணம் பறித்துள்ளதை உணர்ந்த விஜய், இதுகுறித்து கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அசாருதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயிடம் போன் மூலம் பேசி பணம் பறித்த மோசடி ஆசாமியைத்தேடிவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)