Youth jumping from bridge; Sensation in Chennai

சென்னையில் பரபரப்பாக இருக்கும் கத்திப்பாரா பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக் மூலம் மேம்பாலத்தில் ஏறிய சாமுவேல் ராஜா (23) என்ற அந்த இளைஞர் பாலத்தின் மேலே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு மேலே இருந்து குதிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் குதிக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில் அதைக் கேட்காத சாமுவேல் ராஜா குதித்து கீழே விழுந்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சாமுவேல் ராஜா உயிரிழந்தார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கீழே விழுந்த சாமுவேல் ராஜாவின் ஆடையில் கீழே விழுந்த செல்போனை வாகன ஓட்டி ஒருவர் எடுத்துச் சென்றதாகவும் பார்த்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பரபரப்பாக இருக்கும் கிண்டி கத்திப்பாரா பாலத்தில் இருந்து இளைஞர் குதித்துதற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.