Youth jailed for one year for cheating on marriage

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள கணக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பிரகாஷ். இவர் சிங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுபெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் காதலர்களாக வலம் வந்துள்ளனர். அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பிரகாஷ் உறுதி அளித்துள்ளார். இதை நம்பிய அப்பெண் பிரகாஷ் உடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

Advertisment

இவர்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதில் அப்பெண் கருத்தரித்துள்ளார். இனிமேல் தங்கள் காதலை மூடி மறைக்க முடியாது என்று உணர்ந்த அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பிரகாஷிடம் வற்புறுத்தினார். அவரோ திருமணம் செய்ய மறுத்ததோடு அப்பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்தார்.

Advertisment

இவர்களின் காதலைப் பற்றி தீவிர விசாரணை செய்த மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி காந்தி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், பிரகாஷுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அபராதமாக இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.