youth injured in salem police searching culprits

சேலத்தில், ரவுடி கொலை வழக்கில் பழி தீர்க்கும் திட்டத்துடன் வாலிபரை பத்து பேர் கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் சின்னவர் (22). ரவுடி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பிணையில் வெளியே வந்த அவர், ஓமலூரில் தனியாக வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வருகிறார். பழிக்குப்பழி சம்பவம் நடக்கலாம் என்ற எச்சரிக்கை காரணமாக அவர் கிச்சிப்பாளையத்திற்கு வருவதை தவிர்த்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், கிச்சிப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் மாதேஸ்வரியின் வீடு புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதால், பெயிண்ட் அடிப்பதற்காக சின்னவர் இரு நாள்களுக்கு முன்பு மனைவியுடன் சொந்த ஊர் வந்தார். அன்று இரவு 8 மணியளவில், உணவு வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே சென்றுள்ளார். அவருடன் கூட்டாளிகள் தினேஷ், மதன் ஆகியோரும் சென்றனர்.

அப்போது, ஏற்கனவே கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி செல்லத்துரையின் சித்தப்பா மகன் மொன்னையன் என்கிற துரைசாமி மற்றும் கூட்டாளிகள் 10 பேர் சின்னவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அந்த கும்பல் திடீரென்று சின்னவரை வழிமறித்து, கத்தி மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், மயங்கி கீழே விழுந்தார். அதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தக் கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக மொன்னையன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். ரவுடி செல்லத்துரை கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பழிக்குப் பழியாக கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து வருவது கிச்சிப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.