youth incident a school student in Chidambaram

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 13). இவர்சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisment

கடந்த 20 ஆம் தேதி சிதம்பரநாதன்பேட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள தனது பாட்டி லலிதாவின் வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் குளத்தில் மணிகண்டன் பிணமாக மிதந்தார்.

Advertisment

இதுபற்றி அறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் இறந்து போன மணிகண்டனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அண்ணாமலை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டனின் பிரேதப் பரிசோதனை முடிவு வந்த நிலையில், அதில் அவனுடைய கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவனை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர்

அதில், சிதம்பரம் அருகே உள்ள சிதம்பரநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் ராகுல் (19) என்பவர் மணிகண்டனைக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் சிதம்பரத்தில் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறை இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி, ராகுலைக் கைது செய்து விசாரித்தனர்.

அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, மணிகண்டன் தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். அப்போது, அவனுக்கு ராகுலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுலின் அக்கா மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பது குறித்து, மணிகண்டன் வேறு ஒரு நண்பரிடம்பேசியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ராகுலுக்கு, மணிகண்டன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 20 ஆம் தேதி கோவில் திருவிழாவில் பங்கேற்க மணிகண்டன் சென்ற நிலையில் அன்றைய தினம் இரவு சாமி வீதி உலா முடிந்து, கோவில் அருகே படுத்திருந்த மணிகண்டனை ராகுல் வயிறு வலிக்கிறது, கழிப்பிடம் செல்லலாம் எனக்கூறி கோவில் குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மணிகண்டனைக் கழுத்தை நெரித்து நீரில் அழுத்திக் கொலை செய்துவிட்டு வந்ததுவிசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.