/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_81.jpg)
விழுப்புரம் நகரை ஒட்டி உள்ள சித்தேரி கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் என்கிற ராம்குமார். இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சில நாட்களுக்கு முன்பு 2000 ரூபாய் பணம் கடன் கேட்டுள்ளார். ஆனால் பாலாஜி வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வருவதால் ராம்குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராம்குமார் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பாலாஜி ராம்குமார் மீது கோபத்திலிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ராம்குமார் தனது வீட்டிலிருந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர்களிடம் வசூலிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, சித்தேரி ரயில் நிலைய பாதை அருகே எதிரே வந்த பாலாஜி ராம்குமாரை இடைமறித்து ஏன் எனக்கு வட்டிக்கு பணம் தரவில்லை என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராம்குமாரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதில் ராம்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் ராம்குமாரை மீட்டு முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்குசிகிச்சை பலனின்றி ராம்குமார் உயிரிழந்தார். இது குறித்து ராம்குமாரின் உறவினர்கள் விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக உள்ள பாலாஜியைத் தேடி வருகின்றனர். ஏற்கனவே பாலாஜி மீது ராம்குமார் கொடுத்த புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்று அவரது உறவினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ராம்குமாருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)