Advertisment

பழிக்குப் பழி... தொடரும் கொலைகள் - ஓட ஓட வெட்டப்பட்ட இளைஞர்!

Youth incident near Tirupur

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில், வியாழக்கிழமை(8.8.2024) காலை எட்டு மணி அளவில், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென காரில் வந்த ஐந்து நபர்கள் அவரை மறித்து திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில், அவரை வெட்ட நேரம் பார்த்துள்ளனர். இதைக்கண்டு உடனே சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர், பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அந்த இளைஞர் தப்புவதைப் பார்த்த ஐந்து நபர்களும், நடுரோட்டில் துரத்திச் சென்று ஓடஓட விரட்டி கொடூரமான முறையில் தலை, கழுத்து மற்றும் கைப் பகுதிகளில் வெட்டியுள்ளனர்.

Advertisment

இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்க இருந்தார். அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டப்பட்ட வாலிபர் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் என்பதும் பிரபல ரவுடியான இவர் மீது கொலை ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இவர் வெட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

Advertisment

இந்தநிலையில் இந்த கொலை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவரான அக்னி ராஜ், கடந்த 2021 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில், ஒன்பதாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த இவரை, மார்ச் 5ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். இதற்குப் பழிவாங்க வேண்டும் என, அக்னி ராஜன் நண்பர்கள் 'அக்னி பிரதர்ஸ்' என்று ஒரு குழுவைத் துவக்கி, அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி என்ற மூவரை அடுத்தடுத்து தலையைச் சிதைத்து வெட்டி கொலை செய்தனர்.

இந்நிலையில் பல்லடம் அருகே உள்ள பேக்கரியில் வினோத் கண்ணன் மற்றும் பொன்னையா என்ற இருவர் பணியாற்றி வருவதை அறிந்த அக்னி பிரதர்ஸ் குழுவினர், அவர்களை கண்காணித்து வந்துள்ளனர். இன்று இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுச் சென்ற போது பொன்னையா தப்பிச் சென்றுள்ளார். அங்கு இருந்த வினோத் கண்ணன், இவர்களைப் பார்த்துத் தப்பிக்க முயன்று ஓடி உள்ளார். பின்னர், காரில் துரத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், கரையாம்புதூர் பகுதியில் வெட்டி தலையைச் சிதைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளது.

இவர் மைனர் மணி கொலை செய்யப்பட்ட போது உடன் வெட்டு காயம் அடைந்தவர். அக்னி ராஜ் கொலை வழக்கில், இவர் சேர்க்கப்பட வில்லை என்ற நிலையில்.. அக்னி ராஜ் கொலைக்கு இவரும் காரணம் என அக்னி பிரதர்ஸ் குழுவினர், இவரைக் கொலை செய்துள்ளனர். இது பழிக்குப்பழியாக நடந்த நான்காவது கொலை எனச் சொல்லப்படுகிறது. மேலும், அக்னி ராஜ் கொலை வழக்கில் பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் என்ற நான்கு பேரும் கைதாகி பிணையில் வெளியே வந்து தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe