சேலத்தில், சிறுமியிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து சிறுமியின் உறவினர்கள் சரமாரியாகத்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி (21). இவர், சேலம் இரும்பாலை அருகே உள்ள காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆக. 7 ஆம் தேதி இரவு மூர்த்தி, அந்தச் சிறுமியுடன் வீடு அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
இதைப் பார்த்த சிறுமியின் உறவினர் ஒருவர் அவரைக் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் சில உறவுக்காரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மூர்த்தியை அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத்தாக்கினர். வாலிபரின் அலறல் சத்தம் கேட்ட அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர், இரும்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மூர்த்தியை பத்திரமாக மீட்டனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மூர்த்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.