/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/30_82.jpg)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள டாஸ்மாக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரைத் தாக்கி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இசக்கி, ரத்த காயங்களுடன் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், தாக்கியவர்களை தேடிய போது, அவர்கள் நேரு சிலை பின்புறம் உள்ள மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த வடக்கு காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மறு நாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர் கையில் இருந்த லாட்டியை பிடுங்கி அவரையே தாக்கத் தொடங்கி உள்ளனர்.
இதைத் தடுக்க சென்ற மற்றொரு காவலரையும் அந்த கும்பல் ஆபாசமாக திட்டிக் கொண்டே சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு காயமடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர்களை தாக்குவது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தாக்கப்பட்ட காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)