youth committed the atrocities by lying on a mat on the bull track

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருவிழாவையொட்டிஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தென் தமிழ்நாடு அளவுக்கு இல்லை என்றாலும் வட தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஜல்லிக்கட்டு பெரிய விழாவாகவே நடந்து வருகின்றன.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊசூர் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்பாட்டு ரீதியாகப் பல ஆண்டுகளாக இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. தற்போது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், அரசு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாடுபிடி வீரர்களுக்குக் காப்பீடு, மருத்துவ முகாம், வருவாய்த்துறை, காவல்துறை அனுமதி, பாதுகாப்பு, காளைகள் பார்வையாளர்கள் மீது மோதாமல் இருக்க தடுப்புகள் போன்றவற்றை அமைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஊசூர் பகுதி மக்களும் புதூர், கோவிந்த ரெட்டிபாளையம்மக்களும், ஜல்லிக்கட்டுக்கான காப்பீடு கட்டணத்தை மூன்று லட்சமாக காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தியதைக் கண்டித்து, அரசு இதனைக் குறைக்க வேண்டும் எனச் சொல்லி பொங்கலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த காப்பீடு இல்லாததால் காவல்துறை போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை எனச் சொல்லி சாலை மறியலில் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை, அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

Advertisment

பொங்கல் திருநாள் முடிந்ததை முன்னிட்டு ஜனவரி 18 ஆம் தேதி ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து இருந்தனர். 100க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு மூன்று சுற்றுகள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு வீரர்களும் கலந்துகொண்டு மாடு பிடிப்பதில் ஈடுபட்டனர். சில மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அனுமதி பெறாமல் நடைபெற்ற விழா என்பதால் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அந்தப் பகுதியில் முகாம் அமைக்கவில்லை.

எருதுகள் ஓடக்கூடிய பாதையில் பாய், தலையணை போட்டுப் படுத்து அலப்பறை செய்தனர் சில இளைஞர்களும்ஒரு இளம்பெண்ணும். காளை ஓடிவரும்போது பாய், தலையணையை தூக்கிக்கொண்டு ஓடினர். காளை கடந்து சென்றபின் மீண்டும் அதேபோல் செய்துள்ளனர். இதனால் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை விட இவர்கள் அலப்பறையை சிரித்து ரசித்தனர். போட்டி நடத்திய விழாக் குழுவினர் அதிருப்தியடைந்தனர்.

இந்த குடிபோதை இளைஞர்களால் எருது விடும் போட்டியில் கலந்து கொள்வதற்கு வெளியூர்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள், உங்க அட்டகாசம் தாங்க முடியலடா எனப் புலம்பிவிட்டுப்புறப்பட்டுச் சென்றனர்.