/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_76.jpg)
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், மாஜி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் மகள் திருமண விழா பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த திருமணத்திற்கு தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமாருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. செல்வக்குமாருக்கு அழைப்பு கொடுத்திருந்த நிலையில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துஜி, அதிமுக மாவட்டசெயலாளர்சேகரிடம் எங்கள் தலைவர் வருவதால் கட்சிக் கொடி, பேனர்கள் வைக்க வேண்டும் நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று கேட்ட போது தாராளமாக வைக்கலாம் என்று சேகர் கூறியுள்ளார்.
அதன் பிறகு சனிக்கிழமை இரவே கே.கே.செல்வக்குமார் படத்துடன் எடப்பாடி பழனிசாமி படமும் போட்ட வரவேற்பு பதாகைகள் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு கொடிகளும் நடப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை அதிமுகவினர் கே.கே.செல்வகுமாரின் கொடிகளை பிடுங்கி எரிந்துவிட்டு அதிமுக கொடிகளை நட்டு வைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் பிரதானச் சாலையில் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு திரண்ட தமிழர் தேசம் கட்சியினர், இளைஞர்கள் தங்கள் கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடு என்று திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரம் மறியல் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த எடப்பாடியின் வாகனத்தை மறித்து நிறுத்திவிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_662.jpg)
காரில் இருந்தவரிடம், எங்கள் கட்சி கொடியை பிடுங்கி எரிந்த அதிமுகவினர் பெயர் பட்டியல் உள்ளது. அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். உங்கள் படமும் போட்டு வைத்த பதாகைகளையும் தூக்கி எரிந்துவிட்டனர். எங்கள் தலைவர் உங்களுடன் கூட்டனி வைத்தால் நாங்கள் தான் உங்களுக்காக ஓட்டு கேட்க வேண்டும் என்று சரமாரியாக பேசினர். அனைத்தையும் கேட்ட எடப்பாடி பழனிசாமி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்த பிறகு இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து அனுப்பி வைத்தனர்.
முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவரின் கார் மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் பட்டுக்கோட்டையில் எழுந்துள்ள இந்த பிரச்சனையால் நாடாளுமன்றத் தேர்தல் பாதிக்குமோ என்று ஆலோசனை அதிமுகவினர்செய்து வருகின்றனர். அதிமுக மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் இது நடந்திருக்காது. எங்கள் கொடியை அகற்றியவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.
Follow Us