/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_184.jpg)
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தீபாவளி நாளன்று கணவன், மனைவி இருவரும் அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
சிட்டபுள்ளாபாளையம் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் 57 வயதான ராமசாமி என்ற விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி 47 வயது அருக்காணி. இவர்களது மகள் மேனகா, மேனகாவின் கணவர் பெருமாள் இவர்களுக்கு பைரவ மூர்த்தி என்கிற மகன் உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட மகள் மேனகா, சிட்டபுள்ளாபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு கணவர் மற்றும் மகனுடன் வந்துள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மதுசூதனன் என்கிற 20 வயது இளைஞர் தனது பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்களுடன் சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த வழியாக வந்த மேனகாவிடம் போதை தலைக்கேறிய இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து மேனகாவின் கணவர் பெருமாள் கிண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மதுசூதனின் நண்பர்கள் பெருமாளையும், மேனகாவையும் தாக்கியுள்ளார்கள். இந்த தகராறு குறித்து தகவல் அறிந்துவந்த அப்பகுதியினர், இருதரப்பினரையும் அப்போதைக்கு சமாதானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர்களின் தாக்குதலில் காயமடைந்த மேனகாவும், அவரது கணவர் பெருமாளும் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைபெற சென்றுவிட்டனர். ராமசாமியும், அருக்காணியும் தங்களது வீட்டில் பேரன் பைரவ மூர்த்தியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, அருகிலேயே ஆளுக்கொரு பாயில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் மதுசூதனின் நண்பர்கள் 24 வயது கிருபா சங்கர், 23 வயது சூர்யா, சூர்யாவின் தந்தை சாமிநாதன் ஆகிய மூவரும் ராமசாமியின் வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த ராமசாயின் கழுத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டுப்பட்ட ராமசாமியின் அலறல் கேட்டு, கண்விழித்த அருக்காணியையும், அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு மூவரும் தப்பி ஓடியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த பேரன் பைரவமூர்த்தியின் கண்முன்னே தாத்தாவும், பாட்டியும், வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிப்பதை பார்த்து செய்வதறியாது பயந்து அழுதுள்ளான்.
சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தனது அம்மா மேனகா, அப்பா பெருமாள் மற்றும் மாமா யுவராஜ், ஆகியோருக்கு செல்ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளான். இது குறித்து மேனகா, கொடுமுடி போலீசாருக்கு தெரிவித்தார். அந்தத் தகவலின் பேரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ், மாவட்ட எஸ்.பி.தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட ராமசாமி, அருக்காணி ஆகியோர் உடல் கிடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பேரன் பைரவமூர்த்தி கூறிய தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேனாகாவிடம் ரகளையில் ஈடுபட்ட மதுசூதனன், மற்றும் அதே ஊரைச்சேர்ந்த சீவாநந்தன், கார்த்தி, ஜீவாநந்தம், நவீன் ஆகிய 5 பேர்களையும் மடக்கி பிடித்து விசாரித்ததில், கணவன் மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சூர்யா, சாமிநாதன், கிருபாசங்கர் ஆகிய 8 பேர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை சாலையில் அமர்ந்து மது குடித்து கொண்டாடியதை தட்டி கேட்டதற்காக கணவன் மனைவியை அடித்து காயப்படுத்தியதோடு ஏதும் அறியாத வயதான தம்பதியினரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)