Skip to main content

சாலை விபத்தில் வாக்குவாதம்; பட்டப் பகலில் இளைஞர் அடித்துக் கொலை      

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Youth beaten to passed away in road accident

 

சேலம் அருகே, சாலை விபத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கோபிநாத் (33). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். ஜூன் 5 ஆம் தேதி காலை 9.30 மணியளவில், சேலத்தில் இருந்து பேளூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  

 

அயோத்தியாபட்டணம் ராமர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ஜெயபால் மகன் சக்திவேல் (40), அவருடைய அண்ணன் சரவணன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது இருவரின் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருவரின் வாகனங்களும் சேதம் அடைந்து இருந்தாலும் சக்திவேலும், சரவணனும் சேர்ந்து கொண்டு தங்கள் வாகனம் அதிக சேதம் அடைந்துவிட்டதாகக் கூறி, கோபிநாத்திடம் வாகனத்தை பழுது பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டு தகராற்றில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சக்திவேல் திடீரென்று அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது நண்பர்கள், உறவினர்கள் சிலரை நிகழ்விடத்திற்கு வரவழைத்தார்.

 

அவர்கள் வந்த வேகத்திலேயே கோபிநாத்தை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனால் பதற்றமடைந்த சக்திவேல் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காரிப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடம்  விரைந்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சக்திவேல், சரவணன் அவரது நண்பர்கள் சந்தோஷ், சரவணன் மகன் தேவு உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சாலை விபத்தினால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கொலையில் முடிந்தது போல் வெளிப் பார்வைக்குத் தெரிந்ததாலும் கொல்லப்பட்ட கோபிநாத்திற்கும் சக்திவேல் தரப்புக்கும் முன்விரோதம் இருக்கலாம் என்றும் அதனால் திட்டமிட்டே விபத்தை ஏற்படுத்தி அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்