புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெம்மணி ஊராட்சிக்குட்பட்ட பெரிய முள்ளிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கானமுதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று 27 ம் தேதி நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளை வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் சீல் வைத்து வாக்குச்சாவடி மையத்தின் அறையையும் பூட்டிவிட்டு அமர்ந்திருந்தனர்.

Advertisment

அப்போது வாக்குச்சாவடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார். தடுக்க முயன்ற காவலர் சையது முகமது புகாரியை மூர்த்தி தள்ளி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் அன்பழகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த மண்டையூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு காட்டுப்பகுதிக்குள் கிடந்த வாக்கு பெட்டியை மீட்டு பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய மூர்த்தியையும் கைது செய்தனர்.

 Youth Arrested in viralimalai

மீட்கப்பட்ட வாக்குப் பெட்டியில் சீல் உடைக்க படாமல் இருந்ததால் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவின்பேரில் வருவாய்துறை அதிகாரிகள் அந்த வாக்குச் சாவடி மையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை எஸ்பி அருண்சக்தி குமார் வாக்குப் பெட்டி திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்தார். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கருப்பையா, தான் பெட்டியை தூக்கச் சொன்னதும் மேலும் சரவணன், அயப்பன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்ததால் அவர்கள் மூவர் மீது சந்தேகம் ஏற்படவே அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய எஸ் பி அருண் சக்திகுமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வாக்குப்பெட்டியை திருடிக்கொண்டு ஓடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூர்த்தி உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மண்டையூர் போலீசார் அதில் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து துரித விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி வாக்குறுதியை திருடிச் சென்ற மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Advertisment

இதனையடுத்து மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்கானபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்து வாக்கு பெட்டியை திருடிக்கொண்டு ஓடிய சம்பவத்தில் ஒரே நாளில் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு இடங்களில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் மூர்த்தி மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்குதான் முதல் குண்டர் சட்ட வழக்காக கருதப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பியின் துரித நடவடிக்கையால் அடுத்தகட்டமாக 30 ந் தேதி தேரதல் அமைதியாக நடக்கும் என்கின்றனர்.